சென்னையின் இளவயது மேயர் பதவியேற்பு: திமுகவின் பிரியா போட்டியின்றி மேயராக தேர்வு செய்யப்பட்டார்..!!

Dmk Mayor Chennai Election

சென்னை: சென்னை மாநகராட்சி மேயராக திமுகவை சேர்ந்த 28 வயது முதுகலை பட்டதாரி பிரியா பதவியேற்று கொண்டார்.

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளையும் கைப்பற்றியது. தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் நேற்று முன்தினம் கவுன்சிலராக பதவியேற்றனர்.

இந்நிலையில் தமிழகத்தில் மாநகராட்சி மேயர், துணை மேயர், நகர்மன்றத் தலைவர், பேரூராட்சித் தலைவர், துணைத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. சென்னை மாநகராட்சியைப் பொருத்தவரையில் திமுக மேயர் வேட்பாளராக ஆர்.பிரியா அறிவிக்கப்பட்டு இருந்தார்.

அவர் இன்று சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடியிடம் வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரை எதிர்த்து யாரும் போட்டியிடாததால் சென்னை மேயராக ஆர். பிரியா ஒருமனதாக தேர்வானார். இதையடுத்து அவருக்கு சென்னை மாநகர ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவிப்பிரமாணம் செய்துவைத்தார். இ

தையடுத்து பிரியாவுக்கு ஆணையர் வாழ்த்துத் தெரிவித்து மேயருக்கான அங்கியையும் வழங்கினார். மேயருக்கான அங்கியணிந்து இருக்கையில் அமர்ந்தார் ஆர்.பிரியா. அவருக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

மிகவும் இளம்வயது மேயர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் திமுகவின் ஆர்.பிரியா. மேலும் சென்னையின் முதல் பட்டியலின பெண் மேயரும் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts

View all