ஸ்ரீதேவி 60வது பிறந்தநாள்.. ஒட்டுமொத்த இந்தியாவுக்குமான ஒரே நாயகியாக இருந்தவர் ஸ்ரீதேவி மட்டுமே. முழு விவரம்.

Sridevi 60th bday special

இந்தியா முழுவதற்குமான முண்ணனி ஹீரோயின் என்றால் இன்றுவரை அது ஸ்ரீதேவிதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நுழைந்த இடத்தில் எல்லாம் நம்பர் 1. வேறு எந்த ஹீரோயினும் இன்று வரை அதைச் சாதிக்கவில்லை. இன்று அவருடைய பிறந்த நாள்.

நான்கு வயதில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, இந்தி படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்து, தன் 13வது வயதில் மூன்று முடிச்சு படத்தில் நாயகியாகி, 14 வயதில் 16 வயதினிலே என்னும் தமிழ் சினிமாவின் ஒரு திருப்பு முனை படத்தில் நடித்து, 20 வயதில் இந்தியாவின் கவர்ச்சிக் கன்னியாக மாறியவர் ஸ்ரீதேவி.

ஸ்ரீதேவி நாயகியாக அறிமுகமான காலகட்டத்தில் ஸ்ரீவித்யா, லட்சுமி, மஞ்சுளா, படாபட் ஜெயலட்சுமி, சுஜாதா, ஸ்ரீபிரியா போன்ற நடிகைகள் நடித்துக் கொண்டிருந்தார்கள். முகலட்சணமும் நடிப்பும் இருக்கும். ஆனால் பெரும்பாலும் பருத்த உடல் அமைப்புடன் இருப்பர்கள் அல்லது கவர்ச்சியான உடல் அமைப்பு இருக்காது. நடனத்தில் ஒரு கிரேஸ் இருக்காது. ஆனால் ஸ்ரீதேவி முக லட்சணம், உடல் அழகு, நடிப்பு, நடனம் என ஒரு கம்ப்ளீட் பேக்கேஜாக இருந்தார். அதனால் நாயகியாக நடிக்க ஆரம்பித்த உடனேயே எல்லோரையும் கவர்ந்தார். அந்தக் காலத்தில் மட்டுமல்ல எந்தக் காலத்தில் ஸ்ரீதேவி அறிமுகமானாலும் அவர் இன்ஸ்டண்ட் ஹிட் ஆவார்.

Sridevi 60th bday special

அப்போது நாயகர்களாக பார்ம் ஆன கமலுக்கும், ரஜினிக்கும் மற்ற நடிகைகளை விட ஸ்ரீதேவியே பொருத்தமாக இருந்தார். அவர்களின் பெரும்பாலான படங்களில் ஸ்ரீதேவிதான் நாயகி. குரு, பிரியா போன்ற கவர்ச்சிகரமான கேரக்டர் ஆனாலும் சரி, மூன்றாம் பிறை, ஜானி போன்ற கிளாசிக்கானாலும் சரி, சிகப்பு ரோஜாக்கள், வறுமையின் நிறம் சிகப்பு, தர்மயுத்தம் போன்ற பெர்பார்மன்ஸ் ரோலானாலும் சரி, அடுத்த வாரிசு, போக்கிரி ராஜா, தனிக்காட்டு ராஜா, ராணுவ வீரன், கல்யாணராமன் போன்ற கமர்சியல் படங்களானாலும் சரி. எந்த ரோலாக இருந்தாலும் அப்படியே பொருந்திப்போவார். வாழ்வே மாயத்தில் ஏர் ஹோஸ்டலாகவும் அசத்துவார், சிகப்புக்கல் மூக்குத்தியில் அப்பிராணி கிராமத்துப் பெண்ணாகவும் மாறுவார். பகலில் ஒரு இரவில் கவர்ச்சியின் எல்லைக்கும் போவார்.

ஸ்ரீதேவி அதே நேரத்தில் தெலுங்கிலும் முண்ணனி நடிகையாக இருந்தார். ராமாராவ்,கிருஷ்ணா என சீனியர் சிட்டிசன்களுடனும் சிரஞ்சீவி போன்ற வளரும் நாயகர்களுடனும் தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். இங்கேயும் சிவாஜியுடன் சந்திப்பு படத்தில் நடித்தார். அதற்கு முந்தைய ஆண்டுகளில் கேரளாவிலும் தன் முத்திரையை பதித்திருந்தார்.

அந்த ஆண்டுகளில் ஸ்ரீதேவிக்கு இருந்த கிரேஸானது மிகப்பெரிது. பிரியா பட நீச்சலுடை ஸ்டில் இல்லாத சலூனை அந்நாட்களில் காண இயலாது. சிறு உணவகங்களில் வெளியே டீ ஸ்டால் இருக்கும். உள்ளே நான்கைந்து மர பெஞ்சுகள் போட்டிருப்பார்கள் சாப்பிட. அந்த பெஞ்சுகளின் பின்னால் உள்ள கிடுக்குகளில் எல்லாம் ஸ்ரீதேவி பட போஸ்டர்களைத்தான் ஒட்டியிருப்பார்கள், பாம்பே டையிங் வெளியிடும் காலண்டர்கள் அந்நாளில் பிரசித்தம். ஸ்ரீதேவி கத்தரிப்பூ கலர் சேலை அணிந்து வெளியான பாம்பே டையிங் காலண்டர்கள் ஆண்டு கழிந்தும் மாற்றப்படாமல் தொங்கின. சிவகாசியில் பெரிய பட்டாசு பார்சல்களில் எல்லாம் ஸ்ரீதேவி படங்கள் தான் ஒட்டியிருப்பார்கள். சரவெடி பாக்ஸ் என்றால் பிரியாவில் வரும் நீச்சலுடைப் படம்.

ஸ்ரீதேவி எல்லோருக்கும் பிடித்த நடிகையாக இருக்க அவர் ஏற்ற வித்தியாசமான வேடங்களே காரணம். இளைஞர்களில் ஒரு பிரிவினர் அவரது கவர்ச்சிக்கு அடிமை என்றால், மற்றவர்களுக்கு அவர் ஒரு காதல் தேவதையாக தோன்றினார், சிலருக்கு பெர்பார்மென்ஸால் பிரியத்துக்கு உரியவரானார். ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிடித்த நடிகையாக ஒருவர் இருப்பது ஆச்சரியம். பொண்ணு ஸ்ரீதேவி மாதிரி இருப்பா என்ற வழக்கு அப்போது உருவாகி இன்னும் நிலைபெற்றிருக்கிற ஒன்று.

என் பெரியப்பா பையன் நல்ல உயரமாக, சிகப்பாக இருப்பார். அவனுக்கு என் பெரியம்மா பெண் தேடும் போது, அத்தை ஒருவர், என் பொண்ணு இருக்கு, வெளியே தேடுறீங்க என ஒரு விசேஷத்தில் கேட்டார். அதற்கு என் பெரியம்மா, அவன் அழகுக்கு ஸ்ரீதேவி மாதிரி ஒரு பொண்ணு தேடுறோம் என்றார். அதற்கு அத்தை ஏன் ஸ்ரீதேவியையே கட்ட வேண்டியதுதானே? என்று முகவாய்க்கட்டையால் தோள்பட்டையை இடித்துக் கொண்டார்.

சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டிதான் ஸ்ரீதேவியின் சொந்த ஊர். எங்கள் ஊரில் உள்ளவர்கள் எல்லாம் மீனம்பட்டியில் பெண்பார்த்துக் கட்டணும்டா என்று சொல்லிக்கொண்டு சிலகாலம் திரிந்து கொண்டிருந்தார்கள்.

தமிழில் பலதரப்பட்ட கேரக்டர்களில் நடித்து வந்தாலும், தெலுங்கில் கவர்ச்சி நாயகியாகத்தான் பார்மாகி இருந்தார் ஸ்ரீதேவி. சுஜாதா கூட தன் சிறுகதை ஒன்றில் ஒரு உரையாடலில் இங்கதாம்பா இழுத்துப் போத்திக்கிட்டு நடிப்பா ஆனா தெலுங்கில என்று தொனி வரும் வகையில் எழுதி இருப்பார்.

தமிழ் தெலுங்கில் உச்சத்தில் இருக்கும் போதே இந்திக்கும் சென்று அங்கேயும் நம்பர் 1 நடிகையாக பல ஆண்டுகள் கலக்கினார்.

ஷோலேக்குப் பிறகு பட்டி தொட்டியெல்லாம் ஓடிய இந்திப்படம் என்றால் ஹிம்மத்வாலா தான். காரணம் சிம்பிள். நீச்சலுடையில் மாசு மருவில்லாத, வடிவான தொடை தெரிய ஸ்ரீதேவி கொடுத்த போஸை வைத்துத்தான் போஸ்டரே அடித்திருந்தார்கள். லெக்கின்ஸ் பிரபலமான உடன் நினைத்தது உண்டு. ஸ்ரீதேவியை இந்த உடையில் பார்த்திருந்தால் எத்தனை பேருக்கு சொர்க்கம் கிட்டியிருக்கும் என்று. மிஸ்டர் இந்தியாவில் அனில்கபூருடன் ஆடிய ரெயின் ஸாங்குக்கு இந்தியாவே நனைந்ததே. தெலுங்கில் ராகவேந்திரராவ் ஸ்ரீதேவியின் அழகை மேலும் அழகாக்கினார் என்றால் இந்தியில் சுபாஷ் கை. அவர் சுமாரான அழகுப்பெண்களையே சுந்தரியாக மாற்றக்கூடியவர். ஸ்ரீதேவியை? சாந்தினி படத்தில் ஸ்ரீதேவி கட்டிவந்த சேலைகள் எல்லாம் பெரிய ட்ரண்ட் செட்டர் வட இந்தியாவில்.

ஒரு வகையில் பார்த்தால் இந்தியா முழுவதற்குமான முண்ணனி ஹீரோயின் என்றால் இன்றுவரை அது ஸ்ரீதேவிதான். தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என நுழைந்த இடத்தில் எல்லாம் நம்பர் 1. வேறு எந்த ஹீரோயினும் இன்று வரை அதைச் சாதிக்கவில்லை. அந்நாட்களில் எந்த மொழி ரசிகராயிருந்தாலும் சரி, அவர் ஸ்ரீதேவியைப் பற்றி அறிந்திருப்பார் என்ற நிலைமை நிலவியது.

தமிழில் ஹீரோயினாக, கடைசியாக ரஜினியுடன் இணைந்து நடித்த நான் அடிமை இல்லை சரியாகப் போகவில்லை. சில ஆண்டுகள் கழித்து சிரஞ்சீவியுடன் அவர் நடித்த ஜெகதீச வீருடு அதிலோக சுந்தரி டப்பாகி காதல் தேவதை என்ற பெயரில் வந்தது. பொதுவாக வேலை நாட்களின் காலைகாட்சி என்பது பள்ளி,கல்லூரி மாணவர்கள்தான் அதிகம் தென்படுவார்கள், ஆனால் அன்றோ முப்பது வயதுக்காரர்களும் அதிகளவில் தங்கள் காதல் தேவதையை காண வந்திருந்தார்கள்.

அவ்வளவு ஏன்? சிவகாசியில் ஒரு பட்டாசுக் கடை ஓனர் இன்றும் தங்கள் பட்டாசு பாக்கெட்டுகளில் ஸ்ரீதேவியின் ஸ்டில்களைத்தான் உபயோகிக்கிறார். சென்ற ஆண்டு ஒரு விசேஷத்துக்கு சரவெடி வாங்கப்போன போது உடன் வந்த சித்தப்பா, ஸ்ரீதேவி படம் போட்ட 5000 வாலாவைத்தான் செலக்ட் செய்தார்.

இனி ஸ்ரீதேவி போல ஒரு அற்புத நடிகை, எந்த மொழியில் நடித்தாலும் அந்த மொழி மக்கள் நம்மாளு என ஏற்றுக்கொள்ளும் திறமை, அழகு, நளினம் கொண்ட ஒரு நடிகை இங்கே தோன்றுவாரா என்பது கேள்விக்குறி தான்.

Related Posts

View all