மார்ச் 2023க்குள் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை! மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ்.
மார்ச் 2023க்குள் நாட்டின் 200க்கும் மேற்பட்ட நகரங்களில் 5ஜி சேவை கிடைக்கும் என்று மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். டெல்லி பிரகதி மைதானத்தில் நடைபெறும் 6வது இந்திய கைபேசி மாநாட்டை சனிக்கிழமை தொடங்கி வைக்கும் பிரதமர், 5ஜி சேவையையும் அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற, மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் கூறியதாவது., வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள், நாட்டின் 200க்கும் மேற்பட்ட நகரங்கள் 5ஜி சேவையை மக்கள் பெறுவார்கள். இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்று முதல் 5ஜி சேவையை பிரதமர் நரேந்திர மோதி இன்று தொடக்கி வைத்தார். இன்று முதல், நாட்டின் முக்கிய பெரு நகரங்களில் 5ஜி நெட்வொர்க் இணைப்பு கிடைக்கும்.
இந்த 5ஜி சேவையானது நாடு முழுவதும் பல்வேறு கட்டங்களாகவே அமல்படுத்தப்படவுள்ளது. முதல் முதலாக சென்னை, அகமதாபாத், பெங்களூரு, சண்டிகர், டெல்லி, காந்திநகர், குருகிராம், ஹைதராபாத், ஜாம்நகர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, புனே ஆகிய நகரங்களில் 5ஜி சேவை அமலுக்கு வருகிறது. மற்ற நகரங்கள், கிராமங்களில் அடுத்த சில மாதங்களிலோ, ஆண்டுகளிலோ இந்த 5ஜி சேவை கிடைக்கும். தகவல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களான ஜியோ, ஏர்டெல், வோடாபோன், ஐடியா ஆகியவை 5ஜி சேவையை வழங்கவுள்ளன. முதல் கட்டமாக மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களுக்கு 5ஜி சேவைகளை இந்த நிறுவனங்கள் வழங்கும்.
5ஜி சேவை அறிமுகமாகிவிட்ட சூழலில், அது பற்றிய பல கேள்விகள் வாடிக்கையாளர்கள் மத்தியிலும் மக்கள் மனங்களிலும் எழுந்துள்ளன. பல்வேறு கருவிகள், பொருள்களையும் இணைக்கும் வகையில் 5 ஜி தொழில்நுடம் இருக்கும். அந்த வகையில் மருத்துவம், போக்குவரத்து போன்ற பல துறைகளில் இந்த தொழில்நுட்பத்தின் தாக்கம் இருக்கும்.
கிட்டத்தட்ட அனைத்து பிராண்டுகளும் 5ஜி சேவையை வழங்கக் கூடிய திறன்பேசிகளை அறிமுகப்படுத்தியுள்ளன. ஆனால், 4ஜி திறன்பேசிகளில் இந்த சேவையின் பலனை மக்கள் பெற இயலாது. அதற்கு மக்களிடம் குறைந்தபட்சம் 5ஜி திறன்பேசி இருக்க வேண்டும். தற்போது 5ஜி அலைக்கற்றை ஏலம் விடப்பட்டுள்ளதால், புதிய செல்பேசிகளில் 5ஜி அலைக்கற்றை வசதி வருமா என மக்கள் கவலைப்படத் தேவையில்லை.