யோவ் ஒருநாள், வீட்டுக்கு சாப்பிட வாயா, பேசுவோம்.. அமீரிடம் கூறிய கலைஞர்.. சுவாரசிய கதை..
பருத்தி வீரன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன் ஏதோ ஒரு பேட்டியில் அப்போது முதல்வராக இருந்த கலைஞரை கடுமையாக விமர்சனம் செய்திருந்தார் அமீர். அது அப்போது பேசு பொருளானது. அது நடந்து கொஞ்ச நாளில் #பருத்திவீரன் படம் ரிலீஸ். அதற்கு முன் சத்தியம் தியேட்டரில் என்று நினைக்கிறேன் preview show கலைஞருக்காக போட்டுக் காட்டப்படுகிறது. இதை ஏற்பாடு செய்தவர் நடிகர் சிவக்குமார்.
அந்த preview showவிற்கு அமீர் வர தயங்குகிறார். ஏனென்றால் கலைஞரை ஏற்கனவே விமர்சனம் செய்திருந்ததால் கலைஞர் தன்னை நேரில் பார்த்தால் எதாவது கேட்டுவிடுவாரோ, இல்லை திட்டிவிடுவாரோ என்று பயந்திருக்கிறார். அமீரை சமாதானப்படுத்தி அங்கு கூட்டிக்கொண்டு வந்திருக்கிறார் சிவக்குமார். அப்போதும் தியேட்டர் வாசல் முன் தயக்கத்தோடு நின்றிருந்த அமீரை “அப்படில்லாம் அவர் எதுவும் செய்யமாட்டார்.. சும்மா வாயா” என்று சிவக்குமார் உள்ளே கூட்டிக் கொண்டு சென்றிருக்கிறார்.
சிறிது நேரத்தில் கலைஞர் உள்ளே நுழைகிறார். அமீர் வணக்கம் வைத்தபோது கலைஞரும் வணக்கம் வைத்துவிட்டு எதுவும் பேசாமல் சிவக்குமார் அருகில் அமர்கிறார். அமீர் பின் சீட்டில் அமர்கிறார்.
படம் ஆரம்பிக்கிறது.. முடியும் வரை கலைஞர் யாரிடமும் எதுவும் பேசவில்லை. இப்படியான preview showல் படம் ஓட ஓட கலைஞர் ஏதாவது அதில் இருப்பதை பேசிக் கொண்டிருப்பார். ஆனால் இப்படத்தை பார்க்கும் போது கலைஞர் எதுவுமே பேசவில்லை. இந்த படம் கலைஞருக்கு பிடிக்கவில்லையோ என அமீருக்கும் சிவக்குமாருக்கும் தோன்றுகிறது. முடிந்த பின்னாலாவது எதாவது சொல்லுவாரோ என்று சிவக்குமார் கலைஞரை பார்க்கிறார்.
சிவக்குமாரிடம் எதுவும் பேசாமல், திரும்பி, “இந்த படத்தோட டைரக்டரை கூப்பிடு” என்கிறார் கலைஞர். பின்னால் அமர்ந்திருந்த அமீர், ஐயோ என்ன சொல்லப் போகிறாரோ" என்று பதட்டத்தோடு ஓடோடி வருகிறார். வந்தவுடன் அமீரின் முதுகில் தட்டி கொடுத்த கலைஞர் , “யோவ், நீ ஏதும் தனியா படம் எடுத்த மாதிரி தெரியல, உன் கேமராவை அந்த கிராமத்தில் இருக்கும் கோயில் கோபுரத்தின் உச்சியில் வைத்து அப்படியே அந்த கிராமத்தை படம் பிடிச்ச மாதிரி இருக்குய்யா, ரொம்ப யதார்த்தமா இருக்கு, கண்டிப்பாக பெரும் வெற்றிபெறும்” என்று மனதார பாராட்டிவிட்டு,
“சரி, எங்கயா இருக்கு அந்த கிராமம்?” என்று வினவுகிறார். அமீருக்கு ஒன்றும் புரியவில்லை. “என்ன ஆச்சு ஐயா? ஏதும் பிரச்னையா?” என்று கேட்கிறார். “இல்ல இல்ல, தமிழ்நாட்டுல கிட்டத்தட்ட எல்லா இடத்துலயும் கரண்டு கொடுத்துட்டோம். இந்த கிராமத்துல இல்ல, அதான் என்னனு பார்த்து செய்யலாம்னு” என்று கேட்க, “அது செட்” என்று அமீர் அதைப் பற்றி விளக்கம் சொல்லி இருக்கிறார். ஏனென்றால் படத்தில் ஓரிடத்தில் மட்டுமே இருக்கும். மற்ற எந்த இடத்திலும் கரண்ட தந்தி கம்பம் இருக்காது. படம் பார்த்த யாருமே கேட்காத கேள்வி அது. ஆனால் கலைஞர் அதை சரியாக கேட்டதை பார்த்து அமீருக்கு மகிழ்ச்சி. “ஒரு திரைப்படத்தில் கூட அவர் எதைப் பார்க்கிறார்” என்று சமூகத்தின் மீதான கலைஞரின் அக்கறை கண்டு அமீருக்கு வியப்பு.
தியேட்டரை விட்டு வெளியில் செல்லும்போது அமீரை கூப்பிட்டு, “யோவ் ஒருநாள், வீட்டுக்கு சாப்பிட வாயா, பேசுவோம்” என்று வீட்டுக்கு அழைத்திருக்கிறார் கலைஞர், அமீர் தன் மீது அவ்வளவு விமர்சனம் வைத்திருந்த போதும். அமீரும் இது ஏதோ முகஸ்துதிக்காக, பேச்சுக்காக சொல்கிறார் என்று நினைத்து அதோடு மறந்து போனார்.
கொஞ்ச நாட்கள் கழித்து கலைஞரின் உதவியாளர் சண்முகநாதனிடமிருந்து அமீருக்கு போன் வருகிறது. “நாளைக்கு ஃபிரியா இருந்தா, மதியம் லஞ்சுக்கு வரமுடியுமா? என கலைஞர் கேட்க சொன்னார்” என்று சொல்கிறார். உடனே ஒத்துக் கொண்டு, அடுத்த நாள் கலைஞரின் கோபாலபுரம் வீட்டுக்கு செல்கிறார். சினிமா, அரசியல் என உரையாடல் செல்கிறது. மதிய உணவை தயாளு அம்மா அவர்களே நேரில் பரிமாறுகிறார். கலைஞர் தன் மீது வைத்திருக்கும் அன்பை பார்த்து அமீருக்கு நெஞ்சமெல்லாம் மகிழ்ச்சி.
கிளம்பும்போது கலைஞரிடத்தில், “ஐயா உங்க நினைவாக ஒரு பரிசு வேண்டும் " எனக் கேட்கிறார் அமீர். கலைஞர், “உனக்கு பரிசு கொடுக்கற அளவுக்கு என்கிட்டே என்னய்யா இருக்கு” என்று கிண்டலடிக்கிறார். அமீர் தயங்கி தயங்கி, “ஐயா உங்க பேனா ஒன்று வேண்டும்” என்கிறார்.
“ஓ, சரி” என்று சொல்லிவிட்டு சண்முகநாதன் அவர்களை அழைத்து அவரின் ஒரு பேனாவை எடுத்து வர சொல்கிறார். சண்முகநாதன் பேனாவை நேராக அமீரிடம் கொடுக்கிறார். கலைஞர் உடனே அவரிடமிருந்து பேனாவை வாங்கி ஒருமுறை எழுதி பார்த்துவிட்டு, “ம்ம் எழுதுது” என்று சொல்லிவிட்டு, “ஒருவரிடம் பேனா கொடுக்கும் போது அது எழுதுதா என பார்த்துக் கொடுக்க மாட்டயா?” என சண்முகநாதனுக்கு அறிவுரை சொல்லிவிட்டு, அமீரிடம் அவரே பேனா தருகிறார்.
அமீருக்கு மீண்டும் மீண்டும் ஆச்சர்யம். அமீர் அந்த பேனாவை எழுதுவதற்காக கேட்கவில்லை.. அதை ஒரு நினைவு பரிசாக தன்னிடம் வைக்க கேட்கிறார்.. இது கலைஞருக்கு தெரிந்தும் அது எழுதுகிறதா என பார்த்து தந்து, தான் எல்லா விதத்திலும் எவ்வளவு perfectionist என்று நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் என்று வியக்கிறார்.
அதற்கு பின் கூட கலைஞரை அமீர் விமர்சனம் செய்திருக்கிறார். ஆனாலும் அமீர் மேல் கலைஞருக்கு எப்போதும் ஒரு Soft corner இருந்து கொண்டேதான் இருந்தது. அமீரும் நாட்கள் போக போக கலைஞரை புரிந்து கொண்டார்.