காது கேட்கும் கருவி ரூ10,000 இல்லை; உண்மையில் 350 ரூபாய் தான் - ஒப்புக்கொண்ட அண்ணாமலை. முழு விவரம்.
நேற்று, சுந்தராபுரத்தில் 100 நபர்களுக்கு செயற்கை கால், காது கேட்கும் கருவிகளை அரிமா சங்கத்துடன் இணைந்து பாஜக வழங்கியது. அரிமா சங்கத்தின் சார்பாக, தேசிய இயக்குனர் திரு மதனகோபால் அவர்களும் மாவட்ட ஆளுநர் திரு ராம்குமார் அவர்களும் இந்த விழாவில் பங்கேற்றனர். செயற்கை கால்களை பாஜக தமிழ்நாடு கொள்முதல் செய்து மக்களுக்கு வழங்கியது; காது கேட்கும் கருவிகளை அரிமா சங்கத்தினர் வழங்கினர்.
அரிமா சங்கம் காது கேட்கும் கருவி 10000 ரூபாய் மதிப்பிலானது என்று அதன் இயக்குனர் தெரிவித்ததன் அடிப்படையில் தான் பொருளின் விலை மேடையில் அறிவிக்கப்பட்டது. ஜூனியர் விகடன் இதழில் இன்று, 350 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவியை 10,000 ரூபாய் கருவி என்று தெரிவித்ததாக வெளியிட்ட செய்தியின் அடிப்படையில் நாம் விசாரித்ததில், கொடுக்கப்பட்ட காது கேட்கும் கருவிகள் 350 ரூபாய் தான் என்ற உண்மை தெரியவந்தது.
அடுத்த 72 மணி நேரத்திற்குள், 16 குழந்தைகள் உட்பட நேற்று காது கேட்கும் கருவிகளை பெற்றவர் அனைவருக்கும் 10,000 ரூபாய் மதிப்பிலான காது கேட்கும் கருவிகளை பாஜக தமிழ்நாடு வழங்கும். அது மட்டுமல்ல, 16 குழந்தைகளின் பெயரில் தபால் நிலையங்களில் கணக்கு தொடங்கப்பட்டு ஒவ்வொருவர் கணக்கிலும் 5000 ரூபாய் முதலீடாக பாஜக தமிழ்நாடு செய்யும்.
இன்று 4 குழந்தைகளின் பெயரில் செல்வமகள்/PPF கணக்குகள் தொடங்கப்பட்டு அவரவர் பெற்றோர்களின் கையில் ரசீதுகள் வழங்கப்பட்டது. மீதமுள்ள 12 குழந்தைகளுக்கும் அடுத்த 72 மணி நேரத்திற்குள் கணக்குகள் துவங்கப்பட்டு ரசீதுகள் வழங்கப்படும் என்று ட்வீட் செய்துள்ளார்.