தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்க குஜராஜ் அரசு அதிரடி முடிவு!!
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 2 சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. குஜராத்தில் விரைவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்த அதிரடி அறிவிப்பை குஜராத் அமைச்சர் ஜீத்து வஹானி வெளியிட்டார். மாநிலத்தில் உள்ள 38 லட்சம் குடும்ப தலைவிகளை மனதில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர், இதற்காக 650 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் இணைப்பு பெற்றவர்கள் இதன் மூலம் பயன்பெறுவார்கள். சாமானிய மக்களுக்கு, ஆண்டுக்கு ஆயிரத்து 700 ரூபாய் பணம் மிச்சமாகும் என்றும் தெரிவித்துள்ளார். சி.என்.ஜி மற்றும் பி.என்.ஜி கேஸ் மீதான வாட் வரியில் 10 சதவீதம் குறைக்கப்படும் என தெரிவித்துள்ள அவர், இதற்கான தொகை பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இலவச சிலிண்டர் பெறும் பயனாளிகள் ஒவ்வொருவருக்கு 1,700 ரூபாய் வரை செலவிடப்படுகிறது. இதன் மூலமாக 18 லட்சம் பேர் பயன் பெறுவார்கள் என்று குஜராத் அரசு தெரிவித்துள்ளது. மேலும் இயற்கை எரிவாயு மற்றும் பைப் மூலம் பயன்படுத்தப்படும் இயற்கை எரிவாயு ஆகியவற்றுக்கான வாட் வரியை குறைக்க உள்ளதாகவும் கூறியுள்ளது. இதன் மூலமாக ஆட்டோ ஒட்டுநர்கள், இல்லதரசிகள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. இதுமட்டும் இல்லாமல் வாட் வரி குறைப்பு மூலமாக இயற்கை எரிவாயுவின் விலை கிலோவுக்கு ரூ. 6 முதல் ரூ.7 வரை குறையும் என கூறப்படுகிறது. குஜராத் மாநிலத்தில் பாஜக ஆட்சி செய்து வருவது அனைவரும் அறிந்ததே. 2022ம் ஆண்டு இறுதியில் பாஜகவின் ஆட்சி காலம் முடிவடைகிறது. இதையடுத்து தற்போது இலவச எரிவாயு சிலிண்டர் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இது வாக்காளர்களை கவரும் விதமாக அமையும் என பலரும் கருதுகின்றனர். இலவசத் திட்டங்களை மக்களுக்கு தேர்தல் வாக்குறுதி அளிக்கக்கூடாது என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. இந்த நிலையில் பாஜக அரசு இலவச திட்டங்களை அறிவித்திருப்பது சர்ச்சையை கிளப்பி பெரும் விவாதத்திற்கு வழிவகுக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே குஜராத் தேர்தல் தேதி அறிவிப்பதை தேர்தல் ஆணையம் திட்டமிட்டே தாமதப்படுத்துகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் இந்த தேர்தல் வாக்குறுதிகள் மேலும் தேதி அறிவிப்பை தாமதப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.