“ஈ.பி.எஸ் இடைக்கால பொதுச்செயலாளரானது செல்லாது! ஓ.பி.எஸ் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பு
![Ops eps admk tamilnadu](/images/2022/08/17/opseps-png.jpeg)
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது செல்லாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
![Ops eps admk tamilnadu](/images/2022/08/17/eps-png.jpeg)
சென்னையில் கடந்த ஜூலை 11ஆம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் முன்னிலையில் அதிமுக பொதுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டமானது அதிமுக ஒருங்கிணைப்பாளரான தன்னிடம் ஒப்புதல் இல்லாமல் நடத்தப்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதே கோரிக்கையுடன் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்துவும் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் முதலில் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பு உச்சநீதிமன்றத்தை நாடியது. அப்போது அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்கின் கூடுதல் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என உத்தவிட்டது.
![Ops eps admk tamilnadu](/images/2022/08/17/ops-png.jpeg)
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன், அதிமுக பொதுக்குழுக் கூட்ட வழக்கின் மீது அதிரடியான தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்துதான் பொதுக்குழு மற்றும் செயற்குழுவை கூட்ட வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். மேலும், ஓ.பன்னீர் செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் தனித்தனியாக கூட்டம் கூட்டக்கூடாது எனவும், பொதுக்குழுவை கூட்ட ஆணையரை நியமிக்கவேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
![Ops eps admk tamilnadu](/images/2022/08/17/admk.jpeg)
அதேபோல அதிமுகவில் கடந்த ஜூன் 23ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்கவேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பால் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி நியமிக்கப்பட்டது மற்றும் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது உள்ளிட்டவை செல்லாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனிடையே, நீதிமன்றத் தீர்ப்பை வரவேற்கும் விதமாக ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவரது வீட்டின் முன்பு கூடிய அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே நேரம் தங்களுக்கு ஆதரவான தீர்ப்புதான் வரும் என்ற நம்பிக்கையில் வந்த எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
![Ops eps admk tamilnadu](/images/2022/08/17/aiadmk.jpeg)