குட்கா வழக்கில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சிபிஐ!
குட்கா ஊழல் வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் முன்னாள் டிஜிபிக்கள் ஜார்ஜ், டி.கே.ராஜேந்திரன் உள்ளிட்ட 21 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல்.
தமிழ்நாட்டில் குட்கா, புகையிலை, பான் மசலா போன்றவை 2013ஆம் ஆண்டு தடை செய்யப்பட்ட நிலையில், சந்தையில் தொடர்ந்து விற்பனை ஆகி வந்தது. சென்னை செங்குன்றம் அருகேயுள்ள குட்கா குடோனில் கடந்த 2016ஆம் ஆண்டு வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ஏராளமான ஆவணங்கள் சிக்கின. மாதவராவ் என்ற குட்கா வியாபாரி 250கோடி ரூபாய்க்கு மேல் வரி ஏய்ப்பு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது
அப்போது கிடைத்த ஆவணங்களில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ய அப்போதைய அதிமுக அமைச்சர்கள், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.குட்கா வியாபாரத்துக்காக லஞ்சம் கொடுக்கப்பட்ட புள்ளி விவரங்களுடனான டைரி ஒன்றும் வருமான வரித்துறையிடம் சிக்கியது. மொத்தம் ரூ39.91 கோடி லஞ்சமாக மட்டும் கொடுக்கப்பட்டதாக அதில் எழுதப்பட்டிருந்தது. இந்த லஞ்ச விவகாரம் 2017-ம் ஆண்டு ஊடகங்களில் வெளியாகி பெரும் புயலை கிளப்பியது.
தமிழக சட்டசபையிலும் அப்போதைய எதிர்க்கட்சியான திமுக இதனை கிளப்பியது. குட்கா வழக்கில் அதிமுக ஆட்சிக்கால அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா லஞ்சம் பெற்றனர் என்பதுதான் குற்றச்சாட்டு.
பின்னர் குட்கா வழக்கை சிபிஐ விசாரித்து 2018-ம் ஆண்டு முதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது. அதில் மாதவராவ் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், ரமணா தொடர்பாக விசாரிக அனுமதி கோரியது. இதனடிப்படையில் விஜயபாஸ்கர், ரமணா உள்ளிட்ட 12 பேர் மீது வழக்குப் பதிந்து நடவடிக்கை தமிழக அரசு அனுமதியும் அளித்தது.
இந்த நிலையில் விஜயபாஸ்கர், ரமணா மற்றும் முன்னாள் போலீஸ் அதிகாரிகள் ஜார்ஜ், டிகே ராஜேந்திரன் உட்பட மொத்தம் 21 பேருக்கு எதிராக சிபிஐ கூடுதல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
வசமாக மாட்டியுள்ள இந்த குட்கா விற்பனையாளர்கள் விரைவில் சிறைச்சாலை செல்வார்கள் என்று தெரிகிறது.