கண்ணகியின் கோபத்தால் பாண்டியனின் செங்கோல் தகர்ந்த கதை உங்களுக்கு தெரியுமா? கனிமொழி சம்பவம்.

Kanimozhi speech update

மகாபாரதத்தை படித்திருந்தால் தெரியும், அங்கு தண்டிக்கப்பட்டது குற்றவாளிகள் மட்டுமல்ல, குற்றத்தை வேடிக்கை பார்த்தவர்களும் தான். சோழர் கலாச்சாரம் என செங்கோலை வைத்த உங்களுக்கு பாண்டியன் செங்கோல் பற்றி தெரியுமா? சிலப்பதிகாரத்தை படியுங்கள் - திமுக MP கனிமொழி.

இது தொடர்பாக மக்களவையில் பேசிய திமுக எம்.பி கனிமொழி, “அம்பேத்கர் சொன்னது படி சுதந்திரம் நமக்கு பல்வேறு பொறுப்புகளை வழங்கியுள்ளது. இனி நம்மால் ஆங்கிலேயர்களை குற்றம் சொல்ல முடியாது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன். இண்டியா கூட்டணி சார்பில் கொண்டுவரப்பட்ட இந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தை திமுக ஆதரிக்கிறது. நாட்டின் முதன்முறையாக ஒரு மாநிலத்தை காப்பாற்ற நீதிமன்றம் தலையிட வேண்டியதாக இருக்கிறது. மணிப்பூரில் இரட்டை இன்ஜின் அரசு நடக்கிறதாகவும், மத்தியில் பாஜக, மாநிலத்தில் பாஜக ஆட்சி என்பதால் அவ்வாறு சொல்வதாகவும் பாஜகவினர் பெருமைப்படுகின்றனர். ஆனால் மணிப்பூர் பாஜக அரசு, அம்மாநில மக்களுக்கு எதிராகவே அமைந்துள்ளது. வெளிநாடுகளில் இருந்து திரும்பி வந்த பிரதமர் மோடி, மீடியாக்களிடம் சில வார்த்தைகள் மட்டுமே மணிப்பூர் பற்றி பேசினார். ஆனால் நாடாளுமன்றத்திற்கு வந்து பேச அவர் மறுக்கிறார்.

ஜஸ்வந்த் சின்ஹா ஒரு கட்டுரையில் ஜனநாயகம் என்பது நாடாளுமன்ற கட்டிட அழகினால் காப்பாற்றப்படுவது இல்லை, நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் தேசிய பிரச்சனைகளுக்கு தீர்வு ஏற்படுத்துவதால் மட்டுமே ஜனநாயகம் காப்பாற்றப்படும் என்று கூறியிருக்கிறார்.

இன்று #INDIA கூட்டணி தேசிய பிரச்சனை குறித்து பேசும்போது, நீங்கள் நேரில் வந்து அதற்கு பதிலளிக்க மறுக்கிறீர்கள். 170 மக்கள் கொல்லப்பட்டுள்ளார்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர், 60 ஆயிரம் மக்கள் இடம்பெயரும் நிலை ஏற்பட்டிருக்கிறது. 3500 வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளன. இரு தரப்பை சேர்ந்த மக்களின் தலைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன, பாலியல் பலாத்காரங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால் 3 மாத காலமாக ஏன் இவற்றை எல்லாம் உங்களால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று மணிப்பூர் முதல்வரை கேட்கும்போது, இரு சகோதரர்கள் சண்டையிடுகிறார்கள், அரசு அவர்களுக்கு தகப்பனாக இருந்து பேசி வருகிறது என்றார். இது அவமானகரமானதாக இல்லையா?

நாட்டிலேயே அதிக போலீஸ் அதிகாரிகளை கொண்ட மாநிலமாக மணிப்பூர் உள்ளது. 161 கம்பெனி ரிசர்வ் பாதுகாப்பு படையினரும், அசாம் ரைஃபிள் பாதுகாப்பு படையினரும் அங்கு இருக்கிறார்கள். ஆனாலும் மக்களை காப்பாற்றுவதில் அரசு தோற்றுவிட்டது. இந்த இரட்டை இன்ஜின் அரசு வேடிக்கை மட்டுமே பார்த்தது.

இரு பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு, சாலைகள் நடக்க வைக்கப்பட்ட வீடியோ வெளியான உடன், இந்த நாடும், உலகமும் அதிர்ந்தது. அதில் 21 வயதுடைய பெண்ணை பாதுகாக்க அவரது சகோதரரும், தந்தையும் முற்பட்டபோது, அவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். இந்த பெண்ணின் குடும்பத்தை கலவரக்காரர்கள் தாக்கிய போது, அவர்கள் அங்கிருந்த காவல்துறையினரை நோக்கி ஓடியுள்ளனர். தங்களை வேறு எங்காவது அழைத்துச் செல்லும் படி காவல்துறையினரிடம் கெஞ்சியுள்ளனர். ஆனால் காவல்துறையினர் மறுத்துள்ளனர். போலீஸ் வாகனத்தில் இந்த இரு பெண்கள் அமர்ந்த பிறகு, அவர்கள் இருவரையும் வெளியே இழுத்து, அவர்களை நிர்வாணப்படுத்துவதை காவல்துறையினர் வெறுமன வேடிக்கை மட்டுமே பார்த்துள்ளனர்.

மாநில மகளிர் ஆணையம் மற்றும் தேசிய மகளிர் ஆணையம் இதை அமைதியாக பார்த்துக்கொண்டு இருந்தார்களே தவிர, யாரும் நடவடிக்கை கோரி பேசவில்லை. வீடியோ வெளிவந்த உடன் 5 முதல் 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். ஆனால் எதற்காக தங்களை இந்த கலவரக்காரர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று அந்த பெண்கள் கேட்ட கேள்விக்கு இதுவரை அரசு பதில் அளிக்கவில்லை.

பாஜகவினர் இந்த அவையில் திரௌபதி பற்றியும், அவர் எப்படி அவமானப்படுத்தப்பட்டார் என்பதை பற்றியும் பேசுகிறார்கள். இந்த பெண்களும் தங்களை ஏதாவது ஒரு கடவுள் காப்பாற்றுவார் என்று வேண்டியுள்ளார்கள். ஆனால் கடவுளும், அரசும் அவர்களை காப்பாற்றவில்லை. மகாபாரதத்தை படித்தவர்களுக்கு நன்கு தெரியும், குற்றம் செய்தவர்கள் மட்டும் தண்டிக்கப்படவில்லை, அதை அமைதியாக வேடிக்கை பார்த்தவர்களும் தண்டிக்கப்பட்டார்கள். இப்போது இந்திய தாய் இவர்களை பழிவாங்குவார்கள், இவர்களுக்கான தண்டனையை வழங்குவார்.

100க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அங்கு உள்ளன. ஆனால் அங்கு போதுமான உணவுகள் இல்லை, போதுமான அடிப்படை வசதிகள் இல்லை, கட்டிடத்தின் மேல் பகுதி ஒழிகிக்கொண்டு இருக்கிறது, இதில் தான் எங்கள் குழந்தைகள் இருக்க வேண்டியதாக உள்ளது என்று அவர்கள் பசியிலும், பயத்திலும் அழுதார்கள். இதுதான் இந்த நாட்டில் நிவாரண முகாமா? இந்த நாட்டில் அனைத்தும் இழந்தவர்களை, பல நாட்களாக நடக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டவர்களை சந்திக்க கூட நீங்கள் தயாராக இல்லை. அவர்களுக்கு உணவு, பாதுகாப்பு உட்பட எதையும் உங்களால் தர முடியவில்லை.

ஒரு பெண் எங்களிடம் மக்கள் என் மகன் கொல்லப்பட்டான் என்கிறார்கள், ஆனால் நான் அவனின் உடலை பார்க்கவில்லை, அதை நான் நம்ப மறுக்கிறேன், அவனுடைய நண்பனே இதை சொன்னான் என்கிறார். ஆனாலும் அதை அவர் நம்ப மறுக்கிறார். ஏனெனில் தன் மகன் என்றாவது ஒருநாள் திரும்பி வருவான் என்கிற நம்பிக்கையில் தான் இருப்பதாக அவர் சொல்கிறார். இது ஒரு தாயின் குரல் மட்டுமல்ல, பல அண்ணன்கள், தம்பிகள், அப்பாக்கள், சகோதரிகளின் குரல். அவர்கள் அப்படியான நம்பிக்கையில் தான் அங்கு வாழ்ந்து வருகிறார்கள்.

ஒரு மெய்தி சமூக பெண் நிவாரண முகாமில் என்னிடம், நீங்கள் என்னை பார்க்க வந்துள்ளீர்கள். ஆனால் பிரதமரோ, முதல்வரோ எங்களை சந்திக்க ஏன் வரவில்லை? எங்களை பற்றி ஏன் கவலைப்படவில்லை. நாங்கள் எங்களின் வீட்டை, குடும்பத்தை இழந்துவிட்டோம். மீண்டும் நான் என் வீட்டிற்கு செல்லப்போவது இல்லை. அங்கு எனக்கு பாதுகாப்பு இருக்காது. அரசு எனக்கு உதவாமல் விட்டுவிட்டது, என் கண்ணீரை ஏன் யாரும் வரவில்லை என்று கூறினார். அவரை சமாதானப்படுத்தவும், அவரது கண்ணீரை துடைக்கவும் வராமல், பாஜகவின் போலி செய்தி பிரிவு அந்த பெண் பிரதமர் மீது நம்பிக்கை வைத்திருப்பதாகவும், எதற்காக இண்டியா கூட்டணியினர் இங்கு வந்துள்ளீர்கள் என்று கேட்டதாகவும் செய்திகளை பரப்பினார்கள். உண்மை என்னவெனில், அங்கு குக்கி, நாகா மற்றும் மெய்தி என அனைத்து சமூக மக்களிடமும் ஏமாற்றத்தையும், எதிர்பார்ப்பையும் தான் நாங்கள் பார்த்தோம்.

இந்த அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் ஒரே ஒரு கோரிக்கையை மட்டும் வைக்கிறேன். தயவு செய்து அவர்களை சந்தித்து, அவர்களுக்காக அரசு இருக்கிறது என்று சொல்லி, அவர்களின் குறைகளை நிவர்த்தி செய்யுங்கள். அதை கூட உங்களால் செய்ய முடியாதா? நாங்கள் அங்கு #INDIA அவர்களுடன் இருப்பதாக சொல்ல சென்றோம். இந்த அரசு அவர்களுடன் இருக்கிறதா என்பதை தெரிந்துக்கொள்ள விரும்புகிறோம்.

அம்மாநில முதலமைச்சர் போதை கலாச்சாரத்திற்கு குக்கி மற்றும் நாகா மக்களை குற்றம்சாட்டுகிறார். ஆனால் முன்னாள் எஸ்.பி பிருந்தா முதல்வரையும், மணிப்பூர் அரசையும் தான் அதற்கு குற்றம்சாட்டுகிறார். அங்கு என்ன நடக்கிறது என்கிற உண்மை மக்களுக்கு தெரிய வேண்டாமா?

நீங்கள் இங்கு செங்கோல் கொண்டுவந்தீர்கள். அது சோழர்களின் கலாச்சாரம் என்றீர்கள். தமிழகத்தின் கலாச்சாரம் பற்றி உங்களுக்கு தெரியாது என்று நினைக்கிறேன். பாண்டியன் செங்கோல் பற்றி கேள்விப்பட்டுள்ளீர்களா? மக்களுக்கு சரியான நீதியை வழங்க முடியாமல் போனதால், பாண்டியன் செங்கோல் இல்லாமலேயே போனது. கண்ணகி பற்றி உங்களுக்கு தெரியுமா? இந்தியை எங்கள் மீது திணிக்காமல், சிலப்பதிகாரத்தை முதலில் படித்து பாருங்கள். அது உங்களுக்கு நிறைய பாடங்களை கற்றுக்கொடுக்கும்.

புதிதாக ஒரு பிரச்சனை வந்துவிட்டால், பழைய பிரச்சனைகளை மறந்து, புதியதை விவாதிக்க வேண்டிய நிலைக்கு நாம் வந்துவிட்டோம். ஒடிசா ரயில் விபத்து பற்றி நம்மால் பேசவே முடியவில்லை. 3 ரயில்கள் ஒன்றின் மீது ஒன்று மோதி, 288 பேர் உயிரிழக்க, 1000க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இன்னும் அடையாளம் காண முடியாத உடல்கள் புவனேஷ்வர் எய்ம்ஸ் மருத்துவமனையின் இன்னமும் இருக்கிறது. ஆனால் விசாரணை அறிக்கை சிக்னல் கோளாறு மற்றும் தகவல் பரிமாற்றத்தில் ஏற்பட்ட குழப்பமே விபத்துக்கு காரணம் என்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே இத்தகைய கோளாறுகள் குறித்து உரிய விசாரணை நடத்த அரசுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த விபத்தால் உயிரிழந்த மக்களின் குடும்பத்தினருக்கும், இந்த விபத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்? இந்த அரசு உண்மைகளை மறைக்கிறது, பயத்தை பல்வேறு ஆவணங்களை மறைக்கிறது. ஆவணங்கள் அவர்களுக்கு சாதகமாக இல்லை என்றவுடன், ஒருவரை பணியில் இருந்தே நீக்கியுள்ளார்கள். ஸ்ம்ருத்தி இராணியின் பொய்யை அவர் வெளிக்கொண்டுவந்ததால், அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார்.

நாட்டில் வேலைவாய்ப்பின்மை 8% வரை உயர்ந்துள்ளது. வேலைவாய்ப்பு இல்லை என்று சொல்லி மக்கள் மீண்டும் விவசாயத்திற்கே திரும்புகிறார்கள். 50% மக்கள் விவசாயம் செய்கிறார்கள். இது எந்த நாட்டிலும் நடைபெறாத ஒன்றாக இருக்கிறது. பிரதமர் மோடி ஊனமுற்றவர்களை திவ்யான்ஸ் என்று அழைக்கிறார். ஆனால் அவர்களுக்கான ஓய்வூதியம் என்பது வெறும் ரூ.300 தான். இது ஒரு கிலோ தக்காளியின் விலைக்கு சமமானதாக உள்ளது. இதுமட்டுமல்ல பெண்களுக்கு எதிரான குற்றமும் இந்த பாஜக அரசின் கீழ் 26.3% அதிகரித்துள்ளது.

நீங்கள் எங்களை தேசியவாதிகள் அல்ல என்றும், உங்களை தேசியவாதிகள் என்றும் சொல்கிறீர்கள். நீங்கள் தேசியவாதிகளா? இந்திய மக்கள் மீதும், மணிப்பூர் மக்கள், அங்குள்ள பெண்கள் மீதும், அங்குள்ள குழந்தைகள் மீதும் அக்கறை கொள்கிறீர்களா? நீங்கள் இந்திய தாயை ரத்தம் சிந்த வைக்கிறீர்கள். இண்டியா விரைவில் உங்களுக்கு தகுந்த பாடத்தை கற்றுக்கொடுக்கும்” என்று கடுமையாக பேசினார்.

Related Posts

View all